புனித புட்கரிணி







                      வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் புட்கரிணி தீர்த்த திருவிழா 31.07.2015 இன்றைய தினம் இடம்பெற்றது.கடந்த 22.07.2015 ல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் ஒன்பது நாட்களும் வெகு சிறப்பாக நடைபெற்று பத்தாவது நாளாகிய இன்று பூவற்கரையானுக்காக பக்த அடியார்களால் அமைக்கப்பட்ட புதிய பூவற்கரையானின் புனித புட்கரிணியில் காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரையுள்ள சுப ஓரியில் தீர்த்தமாடினார். வதிரி வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கையர் மாதர்கள் பால்குடம் சுமந்து வந்து பூவற்கரையானை பால் கலந்த நீரில் தீர்த்தமாட வைத்த காட்சி பார்தவர் மனங்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளது.  
                   
பழமை மிக்க இவ்வாலயத்தின் பூவற்கரையான் புட்கரிணி என்ற
தீர்த்தக்கேணி இவ்வாண்டு ஆடிமாதம் 22ம் திகதி திறந்து வைக்கப்பட்டிருந்தது.அதேதினத்தில் ஒரு அடியவரின் தாராள முயற்சியினாலும் நிதிப்பங்களிப்பினாலும் அழகிய நுளை வாயில் ஒன்றும் அமைக்கப்பட்டது.
                    வடமராட்சியில் உள்ள சைவ ஆலயங்களில் இதுவும் முக்கிய ஒன்றாக கருதப்படுகின்றது.இதற்கு 90 வருடகால வரலாறு உள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிறு கொட்டிலில் அண்ணமார் ஆலயமாக வணங்கி வரப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிருக பலியும் இங்கே இடம் பெற்றதாக இதன் வரலாறு கூறுகின்றது. கால மாற்றத்தின் சில பெரியோர்களின் முயற்சியால் இம் மிருக பலிநிறுத்தப்பட்டது. அதன் பிற்பாற்பாடு நிரந்தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிள்ளையார் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கற்பக்கிரகம் அமைக்கப்பட்டது. அடியவர்களின் சிறிய பங்களிப்பினால் இதன் கற்பக்கிரகம் பொழி கற்களினால் கட்டியெழுப்பபட்டது. ஆரம்பத்திலிருந்து ஊர் பக்தர்களால் விளக்கு வைத்து பூசை செய்யப்பட்டு வந்தது. பிற்பாடு அந்தணணோத்தமர்களால் இரண்டு நேரப் பூசைகள் இடம் பெற்று வந்தன.
                        இதே வேளை, படிப்படியாக இதற்கான காணிகள் பொது மக்களால் வழங்கப்பட்டு நிரந்தரமான கட்டுமான பணிகள் மெற் கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் இங்கே திருவெண்பாவை உற்சவமே நடை பெற்று வந்தது.பிற்பாடு மக்கள் எல்லோரும் ஒன்று கூடி இதற்கான அலங்கார உற்சவம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இது வரை ஆறு மஹா கும்பாபிஷேசங்கள் நடை பெற்றன. பொது மக்கள் தாராளமாக நிதி, பொருள் உதவிகளை வழங்கி வீதிகள் அமைப்பதற்கான காணிகளையும் வழங்கினார்கள்.உரிய மண்டபங்கள் அனைத்தும் சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டு இன்று மிகப்பெரிய வழர்ச்சி பெற்றிருக்கின்றது. 
                                    
                                    இதன் வளர்ச்சியாக 2003 ம் ஆண்டு பெரும் பொருட் செலவில் ஒரு சித்திரத் தேரும் அதற்கான தரிப்பிட மண்டபமும், தேரோடும் பெரும் வீதியும் அமைக்கப்பட்டது. 2007 ம் ஆண்டு மண்டபங்கள் அனைத்தும் மீள் நிர்மானம் செய்யப்பட்டு புதிதாக பரிவார மூர்த்தங்களும் துவஜஸ்தம்பமும் தென் இந்திய சிற்பாசிரியர்களால் சிற்ப சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

                                       2013ம் ஆண்டு பெரும் பொருட் செலவில் அலங்காரமான வசந்த மண்டபம் ஒன்றி தென்னிந்திய சிற்பாசாரிகளால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனோடு சேர்ந்து பெரும் பொருட்செலவில் தனியொரு அடியவரால் பொது நோக்கு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                             
                                 இந்த வரிசையில் இப்பொழுது பூவற்கரையான் தீர்த்தமாட ஒரு புனித புட்கரிணி அமைந்துள்ளது பூவற்கரையானின் வரலாற்றில்  ஒரு முக்கியமானதொன்றாகும்.