திங்கள், 26 மார்ச், 2012

தேர்ரோட்டம் 2012


 கொடியேற்றம் 2012


மணவாளக் கோலம் 2012


புகைப்படம் :- நிமல் யோகராஜா
பாடல் :- கண.எதிர்வீரசிங்கம்
வீடியோ வடிவம் :- பேபி ஆர்ட்ஸ


பூவற்கரையானின் வரலாறு
மா.கிருஷ்ணகாந்தன்


 வதிரி என்கின்ற பிரதேசம் இலங்கையில் வடமராட்சியில் அமைந்துள்ளது.தமிழ் நாட்டில் இருந்து வந்து குடியேறிய வதிரித்தேவன் என்கின்ற ஆட்சித்தலைவனது பெயராலேயே இவ்விடம் வதிரியென வழக்குப்பெற்றது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆய்வாளர் ஆ,முத்துத்தம்பிப்பிள்ளை
அவர்கள்.இதன் மூலம் வதிரில் சோழராட்சியின் தாக்கம் இருந்தமை வெளிப்படையாகின்றது.
          1935ம் ஆண்டு மரத்தடி ஆலயம் ஒன்று சிறுஆலயமாக மறுமலர்ச்சி பெற்றது.ஆரம்பகாலத்தில் இருந்த பல தடைகள் காரணமாக பூசாரிகள் கிடைக்காததால் ,அந்ததடைகளை தகர்த்தெறிந்து அமரர் செல்லையா என்பவர் இங்கு பூசகராக கடமையாற்றினார்.இவர் எமது ஆரம்ப குருக்களின் தாய்வழிப் பாட்டனாவார்.
          நீண்டகாலமாகவே இறை நம்பிக்கையில் ஆலயத்திலே பலியிடுதல் என்கின்ற ஒரு அனாகரீகமான வழிபாட்டு முறையொன்று இந்துக்கள் மத்தியில் நிலவிவந்தமை ஒரு சாபக்கேடாகும்.உயிர்க் கொலையினைப் பஞ்சமா பாதகங்களில் ஒன்றென இந்துமதம் இணைத்திருந்தும் அதனை உணராது ஆண்டவன் சன்னிதானத்தில் ஆண்டவனுக்கென்றே இந்நிகழ்வினை நடத்தி வந்துள்ளார்கள். நாகரீகமும் மனித பண்பாடுகளும் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்திலும் இந்த நடைமுறை சில ஆலயங்களில் பின் பற்றப்படுவது
வருத்தத்தக்கதாகும்.இதற்கு எமது கிராமமும் விதிவிலக்காய் இருக்கவில்லை.இங்கும் நெடும்காலமாகவே இப்பலியிடும் வழக்கம் நிலவி வந்துள்ளது.
         முற்போக்கு எண்ணங்கள் கொண்ட சைவப்பெரியாராக அமரர் கா.சூரன் அவர்கள் எம்மண்ணிலே தோன்ரியுள்ளார்.பலியிடுதல் கொடுமைகளை எப்படி எடுத்துக் கூறியும்,
அந்த நிகழ்ச்சிமூலம் அதனை நடத்துபவர்கள் அடையும் அந்தகணநேர ஆனந்த உண்ர்வு அவற்றை உதாசீனப் படுத்தியதே தவிர உள்வாங்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் 1923ம் ஆண்டு அதே வேள்வியின் முதல் நாள் இரவு அமரர் சூரன் அவர்கள் அப்பர் சுவாமிகள் ப்ற்றிய ஒரு பிரசங்கத்தினூடு மிகப்பெளவியமாக பலியிடுதலின் அனாகரீகத்தன்மையை விளக்கியிருந்தார்.
இருந்தும் மறுநாள் காலையில் பலியிடுதல் நிகழ்ச்சி மிக ஆரவாரமாகவே ஆரம்பமாகியது.
”காலிலோர் பாவி, கழுத்திலோர் பாவி பிடிக்க கத்தியோடு மற்றோர் மகாபாவி அதனை வெட்ட ஆயத்தமான நிலையில் கத்திக்கும் ஆட்டுக்கழுத்திற்கும் இடையிலே பெரியார் சூரனின் தலை.நினைக்கவே நெஞ்சு கனக்கிறது......பலியிடுதல் நிகழ்வில் யதார்த்தத்தை உணந்தோருர்க்கு அமரரின் கையறு நிலை தெளிவாகவே புரியும்.இந்த நிலையில் பெரியார் சூரன் “பழி என்னைச்சாரட்டும்,தயவு செய்து  வெட்டாதீர்கள் வெட்டுவதாயின்..........” தானே முன் செல்கின்றார்.
         உண்மையிலே அதிசயம்தான். வெட்டுகின்ற கத்தி தானே கீளே நழுவ பலியிடுதலும் எம்மவரிடமிருந்து நழுவியது. ஒருபுறம் மகிழ்ச்சியின் ஆரவாரம்.மறுபுறம் இழப்பின் ஆதங்கம்.
இங்கே அன்பு வென்றது.
          இந்த நிகழ்வின் பின் எமது ஆலயம் உண்மையான இந்துத்தத்துவ மரபுக்குள் தடம் ப்த்தித்தது.
அதன்பின் இங்கே ஏலவே நிலவிவந்த முறை மறைந்து இன்று பிள்ளையார் ஆலயமாக மாற்றம் கண்டதும் இதற்கென சிறிய அளவிலான ஒர் ஆலயம் அமைக்கப்பட்டதும் மிக அரிதாகக் கிடைக்கும்
ஆவணங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது.இவ்வாறு வழர்ச்சியடைந்து வந்த இவ்வாலயத்தின் தேவைகளும் வளரத்தொடங்கின.
          முதன் முதலில் 1943 ம் ஆண்டு ஆலயத்திற்கொரு நிர்வாக சபை அதிபர் க.மு.சீனித்தம்பி அவர்களைத் தலைவராகக் கொண்டும்,சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்களைச் செயலாளராகக் கொண்டும் அமைக்கப்பட்டது.இந்த வகையில் வளர்ந்து கொண்டிருந்த  எமது ஆலய கட்டிட திருப்பணிகளையும்,நித்திய கிரிகைகளையும் செவ்வனே நிறைவேற்றக் கடுமையாக உழைத்தவர் அக்காலகட்டத்தில் எல்லோராலும் பெரியவர் என்று மரியாதையாக அழைக்கப்பட்டவரும் ஆரம்பகாலத்தில் ஆலய முகாமையாளருமான அமரர் க.மு.சின்னத்தம்பி ஆவார்.
          இந்த வேளை அம்பாள் மீது அதிக பயபக்திகொண்ட நம்மவர்கள் அருகேயுள்ள
உல்லியனொல்லை அம்பாளை நேசிக்கத்தொடங்கி விட்டார்கள்,இருந்தும் அந்த சன்னிதானத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்றே தமது பக்தியை காட்டும் நிலையிருந்தது.அங்கே அனுமதிக்கப்படாமை இக்கால வழக்குப்படி ஓர் அப்பட்டமான மனித உரிமை மீறலே.இருந்தும் அம்ப்பாள் தரிசனத்திற்காக எமக்காக ஒதுக்கப்பட்ட எட்டாம் திருவிழாவை எல்லோரும் வியக்கும் வண்ணம் பெரும் பணம் பொருள் செலவில் இந்தியாவிலிருந்து கலைஞர்களைக் கொண்டுவந்து செய்துள்ளார்கள் நம் மூதாதையர்கள்

        இத்தனையும் அம்பாளுக்கு கிட்டேபோகாமல்,அம்பாளை தொடாமல் வெளியே நின்றுதான் செய்யணும்.இதையெல்லாம் பார்த்து மனம் தாங்கமுடியாத அன்றைய இளைஞர்கள் பல பகிஸ்கரிப்புக்களையும் போராட்டங்களையும் நடாத்தி நம்க்கொரு ஆலயம் அமைக்கணும் அதில் நம் விருப்பப்படி செலவுசெய்து விழாகாணவேண்டும் என்ற எண்ணத்தை எம்மக்கள் மனதில் திணித்து வெற்றியும் கண்டார்கள்.
        அதன் பிரகாரம் ஊரார் உதவியுடன் சாதாரணமாக இருந்த பிள்ளையாரை பிரமாண்டமான ஒரு கற்கோயிலாக நிர்மாணித்து 1958 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பெற்று, ஆண்டு தோறும்
ஆடி மாதப் பூரணையைத் தீர்த்தத்திதியாகக் கொண்டு பத்துத்தினங்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது.அத்தோடு 1995 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தைமாதத்திலும் எம் பிள்ளையாரப்பன்  மணவாளக்கோலம் கொண்டு எமது கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளினூடாகவும் வலம் வந்து எல்லோருக்கும் அருள்பாலிப்பதும் எம்க்கு கிடைத்த பெரும் பேறாகும்.
        இங்கே எழுந்தருளியிருக்கும் மூலமூர்த்தியாம் வினாயகப் பெருமான் நேரடியாக எமது கிராமத்தினை நோக்காத நிலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இங்கே எம்பெருமானின் திரு முகத்தோற்றம் நினைவில் கொள்ளத்தக்கது.அது யானைமுகம்.பொதுவாக மிருகங்களின் கண்கள் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் பார்க்கும் தன்மை கொண்டவை.இந்த வகையில் எமது மூலவர் எமது கிராமத்தை கடைக்கண் மூலம் நொக்கியருள்வது சிறப்பானதாகும்.பெரும்பாலும் நேர் பார்வையைவிட கடைக்கண் பார்வையை விடவும் கடைக்கண் பார்வையே மிகச்சிறப்பானது என்பது அபூர்வமான உண்மையாகும்.இந்த வகையில் இவ்வருள் நோக்கு கடைக் கண்பார்வை  நாம் பெற்ற பெரும் பேறாகும்.

     இவ்வித அருட்பார்வை கொண்ட எம்பெருமானின் இல்லத்திற்கு காலத்திற்கு காலம் தமிழ் நாட்டு ஆன்றோர்கள் பலர் வருகை தந்தமை பெருமை படக்கூடியதாகும்.அவர்களுள் குன்றக்குடி அடிகளார்,பித்துக்குளி முருகதாஸ்,முத்தம்ப்ழ் காவலர் ம.பொ.சி, கல்கி  இரா.கிருஸ்ணமூர்த்தி,மகாகவி பாரதியின் பேத்தி விஜயபாரதி,சைவ இசைச்செம்மல் கடையநல்லூர் மஜீத்,அமெரிக்கத் துறவி சுவாமி தந்திரதேவா......முதலியோர் சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இவர்களது பாதங்கள் இம்மண்ணில் பதிந்ததின் தன்மையும் இத்தல வழர்ச்சியின் காரணிகளாகும். இவர்களுள் பித்திக்குளி முருகதாசர் “இறவனைப் பாடிப் பரவாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்களே “ எனும் வாக்கிற்கமைய தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, தனது இனிய குரலில் நல்லிசை கலந்து இறைவனது புகளினைப் பாடும் பணியிலேயே களித்தவர். இவரது வழி பஜனை எனப்படுகின்ற கூட்டுப் பிராத்தனை வழியாகும்.
              அன்றொருநாள்  பித்துக்குளி முருகதாசர் இவ்வலய விஜயத்தின் போது இங்குள்ள முன் மண்டபத்தில் அமர்ந்து  இசைக்கருவிகள் துணையோடு அவர்பாட, அவரோடு கூடவே அன்றைய சிறுவர்களான இன்றைய பெரியவர்கள் தொடர்ந்து பாடியதை எண்ணிப்பார்க்கிறேன். மெய் சிலிர்க்கின்றது. ஏற்கனவே அவரோடுள்ள தொடர்பின் காரணமாக, அவரின் அபிமான சீடராகிய வ.நா.ஆழ்வாப்பிள்ளை என்பவர் கூட்டுப்பிராத்தனை முறைமையை எமது ஆலயத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்தியதால் அன்றைய கூட்டுப்பிராத்தனை வெகு சிறப்பாக அமைந்திருந்தது. இதனை அன்று பாடிய முருகதாசர் அவர்களே மனதார பாராட்டியமை சிறப்பாகும்.
                இவ்வித வழியில் எமது கிராமத்தவர்களை கவிதை,இசை,நாடகத்துறைகளில் சிறந்தோங்க அருள் செய்த எம் பெருமானின் அருள்திறம் வியக்கத்தக்கதாகும். க.வே.ஆழ்வார் என்கின்ற மிகப் பழையவர் தொடக்கம் இன்றுவரை பல கவிஞர்கள் உருவாகி வருகின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக எம்மூர்க் கவிஞர்கள் எமது ஆலயத்துக்கு மட்டுமல்ல அயற்கிராம ஆலயங்கள் பேரிலும் பதிகங்களும் திரு ஊஞ்சற் பாடல்களும் பக்தி இசைக்கீதங்களும் பாடியுள்ளமை விளங்குகின்றன. இந்த வகையில் முதல்வராகப் போற்றக் கூடியவர் அமரர் சைவப்புலவர் சி.வல்லிபுரம் அவர்கள். இன்னும் பல ஆலயங்களில் அன்னாரின் அப்பாடல்கள் இசைக்கப் படுகின்ற போது எமது தனித்துவம் மேலோங்குவதைக் கண்டு பெருமிதங் கொள்கின்றோம்.
                           இவை யாவற்றையும் விட நாமறிந்த வகையில் எம் மூலவரைப் பற்றி எம்மவர் இயற்றிய பஜனைப் பாடல்கள் வெள்ளிதோறும் இசைக்கப் படுவது வேறு இடங்களில் இல்லாத தனித்துவமான சிறப்பாகும். இதற்கான பஜனைப் பாமாலை ஒன்றினை எமது பரிபாலன சபையினர் கும்பிடும் அடியார்கள் பெயரில் 1999 ம் ஆண்டு வெளியிட்டமை எம்பெருமான் அருட் கருனைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது முழுக்க முழுக்க சுயமானதும் எமது மூலவர் பற்றியதுமாகும். இதற்கு முன்பும் பல தொகுப்புக்கள் பெரியண்ணன் பஜனைக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளமையைம் இங்கே குறிப்பிட வேண்டும்.  
            எம் பெரும்மான் கிராமத்தின் காவல் தெய்வம் என்பதற்கான ஆதாரங்கள் பல இருந்தும் சிறப்பு கருதி அவருடைய அற்புதங்களுள் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.1987 ம் ஆண்டு பலாலி இராணுவ முகாமிலிருந்து தரை,கடல்,வான் வழியாக பெரும் எடுப்பில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.வான்,தரை,கடல் வழியாகக் குண்டுகள் மழையாக பொழிந்த வண்ணம் இருந்தன.கிராமத்து மனம்,மொழி ,மெய் யாவுமே  ஒன்றாய் குவிந்து எம்பெருமானது கருணை மழையை வேண்டிச்சென்றன. எமது கிராமம் மட்டுமா ? சுமார் பதினையாயிரத்திற்கு மேற்பட்டவர்கள், வெளியாரும் சேர்ந்து இங்கே நிறைந்திருந்தனர்.அந்த நிலையில் பலவித சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு  உட்பட்ட மாபெரும் கூட்டமொன்று தனது உயிர் காக்க ஒன்றித்து நின்ற காட்சி வியப்பாக இருந்தது.எம்மை சூழ உள்ள பல இடக்களிலும்,ஆலயங்களிலும் பலவித அனர்த்தக்கள்,உயிர்,உடமை...இழப்புக்கள் ஏற்பட்டும் தன்னை நாடி வந்த எல்லோரையும் எந்தவித சிறு சிராய்ப்பு காயங்களுமின்றி எல்லோரையும் காத்து நின்ற பெரும் கருணைப் பேராளனாக எம்பெருமான் திகழ்ந்தமை மிகப் பெரிய அற்புத நிகழ்வாகும்.
  இந்த நிலையினை ஆவணப்படுத்தும் வகையில் அமைந்ததுதான் இப் பாடல்

                            ” நாலு புறம் குண்டு வர நாங்களுன்னைத் தெடிவர
                               நாடி வந்த எமைக்காத்த ஏரம்பா - ஐயா(நாலு)

                               கோலமுறும் இயற்கையெழில் கொண்டிலங்கும் 
                               வதிரியின் கண்  கோயில் கொண்டு 
                               எமைக்காக்கும் கோமானே  ஐயா (நாலு)

                               வானிழிந்த குண்டும்முகாம் தானெறிந்த குண்டுகளும்
                               வள்ளமீன்ற குண்டும் எம்மை வளைத்தெதிர்க்க
                               ஆனமட்டும் உன்கழலை அண்டி வந்து நாம் பணிந்தோம்
                               ஆனைமுகா எமையணைத்துக் காத்தாயே ஐயா (நாலு)

                               தஞ்சமென் றடைந்தபதி னாயிரவர் குடும்பமுந்தன்
                               தான் பணிந்து தம்முயிரைக்காத்திடவே நின்றழுதார்
                               அஞ்சுதலை நீயழித்து ஆறுதலை அவர்க்களித்து
                               அரவணைத்து காத்து நின்ற அற்புத வினாயகனே.(நாலு)"

               
இப்பாடல் அடியேனால் எழுதப்பட்டு
 தமிழ் மன்ற வெளியீடாக ஆலயத்திலே 1998 ம்
ஆண்டு வெளியிடப்பட்ட “பூவற்கரையான் புகழ்
என்னும் தொகுப்பில் இடம் பெற்ற ஒரு பாடலாகும்.
இது இறைவனின் அன்றைய அற்புதத்திறனை
மிக அழகாகப் படம் பிடித்த ஒரு வரலாற்று கீற்றாகும்.
     
ஆக்கம் : திரு.மா.கிருஷ்ணகாந்தன் (தலைவர்)
பூவற்கரை பிள்ளையார் ஆலயம்
வதிரி
2003.08.01